ஜமுனா ஏரி


நல்லூரிலே சட்டநாதர் ஆலயத்திற்கும் முத்திரைசந்திக்கும் இடையில் பருத்திதுறை வீதியின் கிழக்கு பக்கத்தில் இவ் ஜமுனா ஏரி அமைந்துள்ளது. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நல்லூரை தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாண அரசு விளங்கியது. இங்கு கனகசூரியனுக்குப் பின் அரசனாக வந்த அவனது மகன் சிங்கைப் பரராசசேகரன என்பவன் காலத்திலேயே இந்த யமுனா ஏரி கட்டப்பட்டதாகக் கருத்துண்டு.

16ம் நூற்றாண்டிற் போத்துக்கேயர் இலங்கை வந்த போது இங்கு கோட்டை , கண்டி , யாழ்ப்பாணம் எனும் 03 இராசதானிகள் இருந்ததாகவும் அவற்றில் யாழ்ப்பாண மன்னன் பொருள் வளத்திலும் இராணுவ பலத்திலும் மேலோங்கியிருந்ததாகவும் அவர்களது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வரசு தொடர்பாக பிற்காலத்தில் எழுந்த யாழ்ப்பாண வைபவமாலை , கைலாயமாலை , வையாபாடல் முதலான தமிழ் இலக்கியங்கள் யாழ்ப்பாண அரசர்கள் பற்றியும் அவர்களது சாதனைகள் மக்கள் குடியேற்றங்கள் பற்றியும் பல தகவல்களை தருகின்றன.இவ்விலக்கியங்கள் சிங்கைபரராசசேகரன் என்பவனே சிங்கை என்னும் பெயரை தலைநகருக்குரிய பெயராக பயன்படுத்தினான் என குறிப்பிடப்படுகின்றது. இவன் காலத்தில் தான் யமுனாஏரியும் கட்டப்பட்டதாக தெரியவருகின்றது.

yamuna

யாழ்ப்பாண வைபவமாலையில் இவ்வேரிக்கு இடப்பட்ட பெயர்க்காரணம் பற்றி மிகத் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. வட இந்திய யமுனை நதியின் தீர்த்தம் வருவிக்கப்பட்டுத் தலைநகர் அந்தஸ்துடைய நல்லூரில் அமைக்கப்பட்ட ஏரியில் கலப்பித்து விட்ட நிலையில் அரச அந்தஸ்துடனாக்கப்பட்டு யமுனா ஏரி எனப் பெயரிடப்பட்டமையைக் காணலாம்.  இவ்வேரி புகர வடிவிலமைந்து காணப்படுகின்றது.

இவ்வேரியின் அமைப்பும் கட்டடப் பொறிநுட்பமும் அக்காலத் தமிழ் மன்னர்களின் தொழில்நுட்பதிறனை எடுத்துக்காட்டுகின்றது. இவ்வேரி பொழிந்த முருகைக் கற்களையும் வெள்ளைக் கற்களையும் கொண்டு அமைத்துள்ளனர். இக்கேணிக்குள் இறங்கிச் செல்ல வசதியாகச் சிறிய படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான காலங்களில் அரசர்கள் தம் சொத்துக்களை இவ்வேரியில் போட்டுவிட்டு ஓடியதற்கு ஆதாரங்கள் உள்ளன. 1992 களில் இவ்வேரிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மரத்தலான அம்மன் சிலை இதற்கு சிறந்த சான்றாகும். இவ்வேரியில் அரசர்கள் பாதுகாப்புக் கருதிச் சுரங்கங்கள் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அச்சுரங்கங்களில் ஒன்று மந்திரி மனையுடன் தொடர்புபட்டதாகத் தெரிகின்றது.
எவ்வாறாயினும் இயற்கை அரண் இல்லாத யாழ்ப்பாணத்தில் அக்கால அரசர்கள் தமது பாதுகாப்புக்கருதிச் சுரங்கப்பாதைகளையும் இயந்திரப் பொறிகளையும் அமைத்திருந்தனர் எனக் கொள்வதில் வியப்பில்லை. இவ்வேரியைச் சுற்றிச் சில கட்டடத் தொகுதிகள் இருந்திருக்கலாம் என்பதை இங்குள்ள செங்கட்டிகள் கலை வேலைப்பாடுடைய சுண்ணாம்புச் சாந்தினால் ஆன தூண்கள் பழைமையான ஓடுகள் மட்பாண்டங்கள் என்பன உறுதிப்படுத்துகின்றன. 
யமுனா ஏரியின் தோற்றம் யாழ்ப்பாண அரசுக் காலத்தில்தான் தோன்றியதென்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை. ஏனெனில் யமுனா ஏரி அமைந்த பிரதேசம் யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மக்கள் நடமாட்டத்துக்குரிய பிரதேசமாக இருந்ததற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.



இப்பிரதேசத்திற் கண்டுபிடிக்கப்பட்ட லக்ஷ்மி நாணயங்கள் மற்றும் உரோமர் கால நாணயங்கள் இற்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்விடத்தில் உளளுர் மற்றும் சர்வதேசவணிக உறவுகள் இருந்ததறகுச் சான்றாக அமைகின்றன. 
யாழ்ப்பாண அரசு காலத்தில் யமுனா ஏரி சமய முக்கியத்துவம் வாய்ந்த புனித இடமாகவும் அரசமகளிர் நீராடும் அந்தப்புரமாகவும் விளங்கியதாக ஜதீகங்கள் கூறுகின்றன். ஆனால் ஜரோப்பியர் ஆட்சியில் இது வேறுபட்ட தேவைகளுக்காக் பயன்படுத்தப்பட்டதாகக் கருத்துக்கள் உண்டு எவ்வாறாயினும் இற்றைக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே யாழ்ப்பாண அரசுடன் இவ்வேரி தொடர்புபடுத்திப் போற்றப்படும வரலாற்று நினைவு காணப்படுவதால் இவ்வேரிக்கும் யாழ்ப்பாண அரசுக்கும் ஒரு நெருங்கிய வரலற்றுத் தொடர்புண்டு என்பதில் எந்தவித ஜயமும் இல்லை.





உசாத்;துணை நூல்கள்

1) நவரத்தினம்.க. ,2015 , யமுனா ஏரி ,மது பிறிண்டேர்ஸ் , பக்.12-16.

2) குணசீலன்.ம. ,2014 , யாழ்ப்பாணத்து மரபுரிமைச் சின்னங்கள் , கலைக்கேசரி.02 , பக்.126-128.

      

   

  



Comments

Popular posts from this blog

அனுராதபுர கால சந்திரவட்டக்கல் சிற்பக்கலை மரபு

கந்தரோடை