அனுராதபுர கால சந்திரவட்டக்கல் சிற்பக்கலை மரபு
இலங்கையின் கலை வரலாற்றில் சுதேச பாரம்பரியங்களும் விழுமியங்களும் முற்றுமுழுதாக பிரதிபலிக்கும் நிலையில் வளர்த்தெடுக்கப்பட்ட சிற்பக் கலை கூறுகளில் சிறப்பாக குறிப்பிடத்தக்கது சந்திரவட்டக்கல் கலை மரபாகும். இம் மரபு கிருஸ்ணாநதியின் முகத்துவாரத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகும். கி.மு 3ஆம் நூற்றாண்டிலிருந்து இக் கலை மரபு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது சிங்களத்தில் சந்டடை பதும எனவும் சூரிய சந்திரக் கல்இதாமரை வெட்டுக்கல் போண்ற பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் இக் கலை மரபானது ஆரம்பத்தில் தேரவாத பௌத்த சமய கோட்பாடுகளை கொண்டதாக உருவாக்கப்பட்டு பின் மகாஞான பௌத்த மதத்திற்குரிய தத்துவ கோட்பாடுகளை வெளிப்படுத்தும் கலை ஊடகமாக வளர்த்தெடுத்து செல்லப்பட்டது.
moon stone
moon stone
இலங்கையில் சந்திர வட்டக்கல் மரபின் வளர்ச்சி வரலாற்றில் அதன் முதலாவது கட்டத்தினை குறித்து நிற்பது மிகிந்தலை சந்திர வட்டக்கல்லும் கந்தரோடை சந்திர வட்டக்கல்லுமாகும். மிகிந்தலை சந்திர வட்டக்கல்லானது கி.மு 3ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகவும் எவ்வித செதுக்கல் வேலைப்பாடுகளின்றி வெறுமையான அரை வட்ட வடிவில் 03 கற்பலகைகள் இணைக்கப்பட்டு காணப்படுவதுடன் இதில் பிராகிருத வரிவடிவம் தீட்டப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.
அடுத்து கந்தரோடை சந்திர வட்டக்கல்லானது எவ்வித வேலைப்பாடுகளின்றி தனித்தனி துண்டுகளால் இணைக்கப்பட்டு அரை வட்ட வடிவமாக காணப்படுகின்றது. இவை கருங்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்து அபயகிரி சந்திர வட்டக்கல்லானது 03 கற்பலகைகள் ஒன்றிணைக்கப்பட்டு காணப்படுவதுடன் இரு ஆரைச் சிறைகளை உள்ளடக்கிய வகையில் வரைபுகள் காணப்படுகின்றது.
அடுத்து 02வது கட்ட வளர்ச்சியை அனுராதபுர ராணி மாளிகையில் உள்ள சந்திர வட்டக்கல்லில் காணலாம். இதில் யானை, குதிரை , சிங்கம் , எருது என்ற ஒழுங்கில் இடமிருந்து வலமாக அசையும் நிலையில் ஒரே ஆரைச் சிறையினுள் செதுக்கப்பட்டுள்ளதுடன் இதில் 08 ஆரைச் சிறைகள் காணப்படுகின்றது. அடுத்து போதிமர ஆலயத்திலுள்ள சந்திர வட்டக்கல்லானது ஒழுங்கற்ற முறையில் மிருக உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளதுடன் இதில் சிங்க உருவம் இடம்பெற்றிருக்கவில்லை. இதில் முதன் முதலாக தீச்சுவாலை வரிசை அமைந்து காணப்படுகின்றது.
அடுத்து 03வது கட்ட வளர்ச்சியை ரூவன்வெலிசாய, பசவக்குளம் ஆகிய மையங்களில் உள்ள சந்திர வட்டக்கல்லில் காணலாம். ரூவன்வெலிசாய சந்திர வட்டக்கல்லில் முதன் முதலாக அலங்கார கலையில் அதிக மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் 08ற்கு மேற்பட்ட ஆரைவரைபுகள் காணப்படுவதுடன் இவற்றில் முறையே தீநாக்குகள் , யானை , குதிரை ,சிங்கம் , எருது , அன்னம் , படர்கொடி , தாமரை என்ற ஒழுங்கில் செதுக்கப்பட்டுள்ளது.
அனுராதபுர சந்திர வட்டக்கல் சிற்பக்கலை மரபானது பௌத்த தத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர். பரணவிதானா குறிப்பிடுகின்றார். இவ் வகையில் தீச்சுவாலை உலகியல் ஆசாபாசங்களை சுட்டெரிப்பதாகவும் யானை புத்தரின் புனித தன்மையை பேனுவதாகவும் குதிரை வடிவம் பௌத்த சமய குறியீட்டு வடிவமாகவும் சிங்க உருவம் உலகில் கௌதமபுத்தர் சிங்கம் போன்றவர் என்ற கருத்தையும் உணர்த்துகின்றது.
இவ் வகையில் இலங்கையின் சந்திரவட்டக்கல்லானது மிகவும் நெருக்கமான முறையில் பல வளைய ஆரங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வளைய சிறையில் தாமரை இதழ்களை கொண்டுள்ளதாகவும் ஒரே ஆரைச்சிறையில் அசையும் நிலையில் அன்னம் , யானை , எருது , குதிரை , சிங்கம் , கொடிப்பின்னல் , தீநாக்குகள் என்றவாறு செதுக்கப்பட்டு அனுராதபுர கால சந்திர வட்டக்கல் சிற்பக் கலை மரபு அமைவுபெறுகின்றது.
உசாத்துணை நூல்கள்
1)கிருஸ்ணராசா.செ.,1999, இலங்கை வரலாறு.பாகம் 01, வரலாற்று துறை யாழ்ப்பாணபல்கலைக்கழகம் , பக். 68-70.
2) நவரத்தினம்.க.,2007,இலங்கையிற் கலை வளர்ச்சி ,குமரன் புத்தக இல்லம் ,பக்.47-49.
3) சற்குணராசா.சு.,2013, இலங்கைக் கலை , றோயல் அக்கடமி, பக்.51-54.
4) இக்பால்.ம. ,2012 , சிற்பக்கலை வரலாறு , றோயல் அக்கடமி பக்.61-64.



Comments
Post a Comment